Wednesday 24 July 2013

புலம்பெயர் வாழ்வில் புதியதாய் பரிணமிக்கும் 'பதியமிடல்' (implant)


குஞ்சரம் 7
புலம்பெயர் வாழ்வில் புதியதாய் பரிணமிக்கும் 'பதியமிடல்' (implant)

முன்பின் அறிந்திராத புலம்பெயர் தேசங்களில் குடியேறி வாழத் தலைப்பட்டு நான்காவது தசாப்தம் கடக்கும் நிலையில் முதற் தலைமுறை. நினைக்கவே ஆச்சரியம். பிறந்த மண்ணில் வாழ்ந்த காலத்திலும் அதிகமாக புகுந்தகத்தில் வாழ்வைத் தொடரலாயிற்று. பிள்ளைகளை வளர்த்தெடுத்து பேரர்களையும் கண்டாயிற்று. இப்படியாக ஆகுமென நம்மவர்களில் எத்தனைபேர் ஆரம்பத்திலேயே நினைத்திருப்பார்கள்?
புத்தம் புதியதான பிரமாண்டமான பெருநகர்ச் சூழலில் முதற் தலைமுறையினர் பெற்ற அனுபவங்கள் ஆயிரமாயிரம். இவை பதிவிடப்பட்டால் தமிழ் எழுத்துலகிற்கு அனுபவப் பொக்கிசமாகும். இங்குள்ள முறைசார் கல்விகூடங்களில் கற்கையைத் தொடங்கிய தம் வாரிசுகளுடன் பெற்றோரும் முற்றிலும் மாறுபட்டதாய் முறைசாரா வகையில் 'கற்பவர்களாகவே' தத்தமது வீடுகளில் சமாந்தரமாக வாழ்வின் பயணத்தைத் தொடர்ந்திருக்கிறார்கள்.
இந்த முதற் தலைமுறையினர் தாம் இளமையாக வாழ்ந்த ஊரும் ஊராரும் ஊர்ந்தவாறு தத்தமது நினைவிலி மனதில் உருத்தெரியாத விருட்சமாகி அவரவர்களுக்குப் பசுமையைக் கொடுக்கிறது. பல்தேசியச் சூழலில் தத்தமது கற்கைநெறி மற்றும் பணிகள் நிமித்தம் வாழத் தலைப்பட்டுள்ள அடுத்த தலைமுறையினருக்கு இத்தகைய நினைவோடைச் சிக்கல்கள் இருப்பதில்லை. இயல்பாகவே சூழலுடன் இணைந்து இயைந்போனவர்களாக அவர்களது வாழ்வு சீரானதாகப் பயணிக்க ஆரம்பித்தும் விட்டது. ஒரே வீட்டில் வாழ்ந்தாலும் இத்தகைய புலப் பெயர்வுத் தலைமுறை இடைவெளிச் சிந்தனையோட்டத்தால் கொஞ்சம் நிலை குலைந்துள்ளார்கள் என்றே பதிவிட முடியும். தமது பிள்ளைகளின் திருமண வாழ்வு தொடர்பாக சொல்லிட முடியாத மிகை அழுத்தத்துடன் பலர் இருப்பதை வெளிப்படையாகவே காணக்கிடைக்கிறது.
என்னுடன் அந்தக்காலம் தொட்டு கிரமமாகத் தொலைபேசியில் உறவைப் பேணி வருபவர் இலண்டனில் வாழும் முப்பது வருடத்துக்கும் மேலான நட்பைத் தொடரும் நண்பர் கணா என்ற கணபதி. தனது வாழ்வை தமது குடும்ப மேம்பாட்டுக்காக் கொடுத்துவிட்டு இன்று வரையில் தனியனாகவே வாழ்பவர். தனக்கு ஏற்பட்ட நோய்த் தாக்குதலிருந்து மீண்டவராய்த் தனித்தே வாழ்பவர். எண்பதுகளின் தொடக்கத்தில் நாம் இருவரும் ஒன்றாக பெர்லின் நகரத்தில் நட்பாகிக் கைகோர்த்தவர்கள். இவர் மீது தனிப்பட்டதொரு பச்சாதாப ஈர்ப்பு எனக்கு இருந்துகொண்டே இருக்கிறது. இவர் எதாயினும் கேட்டால் நானும் அதிகம் மறுக்காது செய்து கொடுத்துவிடுவேன்.
அன்றொருநாள் எமது கனடாவில் வாழத் தலைப்பட்டுள்ள இன்னொரு நீண்ட கால நண்பரின் மகனின் அகால இழப்பால் நாமெல்லோரும் தொலைபேசி வாயிலான உணர்வுப் பகிர்வில் சங்கமித்திருந்தோம். இத் தருணத்தில்தான் அவரது வீட்டில் முதிர் கன்னிகளாக இருவர் இருப்பதை அனைவராலும் உணர முடிந்தது. சிறந்த கல்வி அறிவும் ஆற்றலுடையவர்களாகவும் இருக்கும் அவர்களுக்கு வரன் தேடும் தார்மீகப் பொறுப்பை எடுத்துவிட்டார் நண்பர் கணா.
ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்த நிலையில் இருந்தாலென்ன ஈழத்தில் வாழ்ந்தால் என்ன இந்த மாப்பிள்ளை தேடும் படலம் 'பொருத்தம்' பார்ப்பதாகத்தான் தொடரச் செய்கிறது. முகம் பார்த்துப் பழகி அறிய முடியாத அறிவை இந்தக் கடதாசியில் இடப்பட்ட கோட்டுக் கட்ட வரைபில் எப்படித்தான் பொருத்திப் பார்த்துத் திருப்திகொள்கிறாரகளோ? ஞான் அறியேன். எனக்கு கிஞ்சித்தும் இதில் உடன்பாடடில்லை. சும்மா சொல்லக் கூடாது... மனித மனத் தரையில் கண்ணை மூடியவாறு பின் தொடரப்படும் 'அசட்டு நம்பிக்கை' (மூட என்ற சொல்லை இதில் பிரயோகிக்க நான் விரும்பவில்லை)எனும் விதை வீழ்ந்து விட்டாலே போதும் இத்தரையில் வெற்றிடமே இருக்காது!!
முதிர் கன்னிகளுக்கு இனிமேல் பொருத்தம் பார்த்து.... விருப்பங்களுடன் இணைங்கி... எப்பதான் திருமணம் செய்வது? எனக்கு வழி தெரியவில்லை. எனது இயலாமையை வெளிப்படையாகவே கணாவுக்குத் தெரியப்படுத்திவிட்டேன். அவர் விடுவதாக இல்லை.
'முகிலன்.... உமக்கு என்ன செய்வது என்பது தெரியாமலிருக்கு! உமக்கு மட்டுமல்ல நாதன் அண்ணைக்கும் இது தெரியாமல் போச்சு. பிள்ளைகளை அவர்களது பாட்டில் விட்டுப்போட்டு இருந்திட்டார். இதுக்கு அப்பவே பதியமிட்டிருக்க வேண்டும்.'
நான் அசந்தே போய்விட்டேன். 'பதியமிடுவதா...?' அப்படியெண்டால் என்ன?' என்னையும் அறியாமல் என் வாயிலிருந்து அனாதரவாகச் சொற்கள் விழுந்தன.
எதிர்முனையில் க்கக்... க்கக்...க்கக்.... க்கக்... க்கக்...க்கக்.... க்கக்... க்கக்...க்கக்.... எக்காளச் சிரிப்பு எனது காதுக்குள் நுழைந்தது.
'தெரியாத படியால்தான் கேட்கிறேன்.... சொல்லிதாருமேன்....' எனது இறைஞ்சல் ரிதத்தை சொற்களைக் காவிச் சென்றன.
'முகிலன்!... சமூகத்தை அறியவேண்டும். இதில் எப்படியாக வாழவேண்டும் என்று தெரிந்திருக்க வேண்டும். பிள்ளைகள் பற்றிய கரிசனையை அவர்களது கல்வியில் மட்டும் செலுத்தினால் போதாது முகிலன்! அவர்களது எதிர்கால வாழ்வை நிர்ணயிக்கக் கூடியவாறு.... சிலபல பதியம் போடலையும் செய்யத்தானே வேணும்.' என்று இழுத்து இழுத்து நிதானமாக ஏற்ற இறக்கத்துடன் தெளிவாக வந்திறங்கின வார்த்தைகள். அவதானமாகக் கேட்டுக்கொண்டிருந்தேன்.
'பிள்ளைகள் வளரும்போதே நாசூக்காக அங்கங்கே பழகும் வாய்ப்பைக் கொடுத்து.... முகமாற்றங்களை அளவிட்டு.... வேறுபல சந்தர்ப்பங்களை வரவழைத்து... குடும்ப நிகழ்வுகளை நடாத்தி 'டெக்னிக்கலா' நகர்த்த வேண்டும். இதைவிட்டுப் போட்டு வயது ஏறிய பின் புலம்பக்கூடாது..... இதெல்லாம் உங்களைப் போன்றவர்களால் நினைக்கப்படுவதே இல்லை. கனக்க கதைப்பீர்கள்.... ஆனால் எப்படி வாழ்வதென்று உங்களுக்குத் தெரியாது! இதுதான் நாதன் அண்ணைக்கு நடந்தது. பாவம் அவர் ஊர்ச் சோலி பார்ப்பதாகவே நாட்களைக் கடத்திவிட்டார்...... ம்!....!' பெருமூச்சுடன் நிறுத்தினார் கணா.
'முகிலன்! நான் சொல்கிறேன் எனத் தப்பாக எடுக்கக்கூடாது... உங்களது பொடியங்களுக்கு இப்பவே பதியமிடல் வேலையைத் தொடங்கிப் போடுங்கோ! பிறகு நாதன் அண்ணையின் நிலைதான் வரும்!' என்றார்.
நான் என்னத்தைச் சொல்ல..... திணறித்தான் போனேன். 
'நன்றி' பரிமாற்றத்துடன் தொலைபேசி உரையாடல் துண்டிக்கப்படுகிறது.
***************
இன்றைய உரையாடல் சற்று நீண்டிருந்தாலும் புதியதாய் இருந்ததால் ஆர்வத்துடன் ஈடுபட்டிருந்தேன். சமூகத்தின் - குடும்பங்களின் விமரிசையான ஒன்றுகூடல் நிகழ்வுகள் .... அவர்களது மலர்ச்சியான முககங்கள்..... மீளவும் மனத் திரையில் ஓடத் தொடங்கின. அமைதியானேன்.
இருவருடங்களுக்கு முன்னர் எனது வேலைத்தளத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது நடந்த உரையாடலை மனக்கணினி மீளவும் திரையிட்டது.
தர்மன் நான் பணியாற்றும் நிறுவனத்திற்கு அண்மையில் அமைந்த பிட்சாறியாவில் இருபது வருடமாகப் பணியாற்றுபவர். மதியம்மூடப்பட்டு இரவு வேலை தொடங்கும் இடைவெளியில் சிலவேளைகளில் வீட்டுக்குப் போகாமல் விடுவதும் உண்டு. இத்தருணங்களில் பலதும் பத்தும் கதைப்பதற்காக என் வேலைத்தளத்திற்கு வந்திடுவார். அவரது முதலாளி யூதர். அவர்களது வித்தியாசமான சடங்குகள்.... சம்பிரதாயங்கள்...... நடைமுறைகள்..... எனவாக பல்வேறு விடையங்களை நானும் அவ்வப்போது கேட்டறியும் ஆவல் உள்ளவன். இந்தச் சந்திப்பில் பிள்ளைகளின் கல்விக்கான பாடசாலைத் தெரிவு மையக்கருவாக இருந்தது.
'என் முதலாளி அவரது பெண்பிள்ளையை தனியார் பல்கலைக்கழகப் புகுமுகக் கல்லூரியில் (Lycée) சேர்த்துவிட்டார்.'
'அது நல்லதுதானே! அப்பத்தான் பிள்ளைகள் நன்றாகப் படிப்பார்கள்.'  எனக்கு இத்தகவல் பெரிய அளவில் பாதிப்பைத் தரவில்லை.
'அது இல்லை.... அக்கல்லூரி யூதக் கல்லூரி!'
'அப்ப அதுதான் மிக நல்லது சிறப்பாகக் கவனமெடுத்துக் கற்பிப்பார்கள். நல்ல வேலைதான் செய்திருக்கிறார்...... உமது முதலாளி யூதர் ஆகையால் முன்னுரிமை இருந்திருக்கும்.'
'அப்ப இவ்வளவு நாளும் ஏன் அரசாங்கப் பள்ளியில் வைத்துப் படிப்பித்தாராம்?' கேள்வி தர்மனிடமிருந்து எனக்குப் பாய்ந்தது. என்னால் எப்படித்தான் பதில் சொல்ல முடியும்? விழி பிதுங்கப் பரிதாபகரமாகப் பார்த்தேன்.
'இதைத்தான் நான் அவரிடம் கேட்டேன்..... தெரியுமா?' என்றார் பீடிகையுடன்.
'என்ன சொன்னார்?' நானும் ஆவலுடன்.
'பிள்ளைக்கு வயது வந்துவிட்டது. இனி பலதையும் தேடலுடன் கௌவும் பிராயம். பொதுப் பள்ளியில் தொடர்ந்தால்..... அவளுக்கு இணைவு நண்பனாக(copain) மொகமட்டும்... மூறாட்டும்.....தான் கிடைப்பார்கள். நானென்ன பைத்தியக்காரனா... விளையாட்டா நினைக்க!! நம்ம யூதக் கல்லூரியில் சேர்த்திட்டா... எப்படியும் நம்ம பையன்களுடன்தானே பழகுவா.... அவருக்கும் நம்ம பையன்தானே இணைவு நண்பனாகக் கிடைப்பான். அதை அதை அந்தத் தருணங்களில் செய்து போடவேண்டும் தர்மா... பிறகு புலம்பக் கூடாது?' என்றவாறு என்னை உறுத்துப் பார்த்த பார்வை என் நினைவில் மீளவும் வந்து போகிறது.
- முகிலன்
பாரீசு 24.07.2013

No comments:

Post a Comment