Monday 30 November 2009

சுவட்டுச் சரம் 1 நினைவுத் துளிகள் (17) இழந்ததும் பெற்றதும்......


சுவட்டுச் சரம் 1
பெர்லின் புலம்பெயர்வு தொடக்க கால நினைவுகள்

நினைவுத் துளிகள் (17)

-குணன்

இழந்ததும் பெற்றதும்......




கடந்த பதினாறு நினைவுத்துளிகளில், புலம் பெயர் வாழ்வின் மனந்திறந்த பதிவிடலாகச் சொட்டும் சில நினைவுகளில் ஒருவாறு முழுமை என்று கூறாவிட்டாலும், நடந்த -கண்டு, அறிந்த- எனது பட்டறிவுப் பார்வைகள் சிலவற்றால் நனைய வைக்கமுடிந்ததென்ற எதிர்பார்ப்புடன் நான் தொடருவதை படித்த சிலராவது புரிந்திருப்பீர்கள் என நம்புகிறேன்!

ஈழத்தமிழர்களின், வன்முறையற்ற, சத்திய நெறி கொண்ட, மனித விழுமியங்களை மதித்து, “நீயும் வாழ், எம்மையும், தன்மானம் உள்ளவர்களா
க வாழ விடு“ என்ற உன்னதமான ஒரே எண்ணத்துடன், நாகரிகமாக, சமஸ்டி(கூட்டாட்சி) அரசியல் முறையைகொண்ட, இணைப்பு ஆட்சிக்கு, கைநீட்டிய முதல் அரை நூற்றாண்டு கடந்த, இன்றைய நிலையில், எமது மண்ணில் வாழ்ந்த நாட்களையும், சேர்ந்து,கூடி வாழந்த குடும்ப உறவுகளையும், விளையாடி, மகிழ்ந்த, வயல் வெளிகள், பனந்தோப்பு, தென்னஞ்சோலை, தோட்டம், துரவு, குளம், கடலில் குதித்து, குளித்து மகிழ்ந்த, கூடித்திரிந்த நாட்களையும், ஊர், கிராமங்கிளில், உடுக்கை, தாளம் போட்டு, பக்கப் பாட்டும், காத்தவராயன், கோவலன் கதைகள், நல்லதங்காள், கண்டியரசன் கதைகள் என்று, அதிகாலை வரை, நீண்டு செல்ல, தூக்கம் தாங்காது, வீழ்ந்து வீதி மண்ணில் தூங்கிய நாட்களும்..... இன்று, எவரும் புலம் பெயர்வில், குறிப்பாக, எமது இளந் தமிழர்கள், பார்த்தறியா பேரிழப்பன்றே நான் கருதுகிறேன்.

இத்தனை இனிய இயற்கை தந்த வாழ்க்கை இருப்புக்களை, சொந்த வெகுமதிகளை, மிக துச்சமாக்கி, இன்று பெற்றுக்கொண்டவைதான் எவை என்று கூறவேண்டியதில்லை! காலத்தின் கோலத்தினால், வானம் பொழிய மறுத்தாலும், வரண்ட மண்ணெனப் பழித்தாலும், கற்பாறைகள் நிறை நிலத்தையும் மாற்றி, கனிதரும் சோலைகள், தோட்டம், வயல் கண்டவர்கள் அல்லவா, நம் முன்னவர்கள், தமது அயராத உடல் உழைப்பை நல்கி வளம் பெருக்கியவர்களின் வழித் தோன்றல்கள் என எம்மைக் கூறத்தான் இப்போது முடியுமா?


கோவில், தேவாலய மணியோசைகள், பள்ளி வாசல்களின் தொழுகை ஒலிகளையும் மீறியதாக காகம், குயில் ஓசையும் காலை இளம் பரிதியின், இளஞ் சூட்டின் இதமான கதகதப்பில், கலைந்தோடும் மாசிப் பனியும், மல்லிகை, முல்லை வாசனைகளும், உள்ளூர் குளங்களில் வெண், செந்தாமரையும் எந்த நாளில் இனிப்போய் காண்போம்? என்று ஏங்கும் உள்ளங்கள் ஏராளம் ஏராளம்! புலப் பெயர்வின் முதல் தலைமுறையினருக்கு இந்த நினைவலை வலி நீங்காத ஒன்றுதான். பு
லப்பெயர்வென்று கூறும் போது, நம்மவர்கள் மத்தியில் பகிரப்பட்ட செய்திகளின் பரிமாணங்களில்தான் எத்தகைய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

முதலில் வெளிநாடுகளுக்கு சென்றவர்கள் பற்றிய செய்திகளும், அவ்வாறு சென்று தற்காலிக, நிரந்தர இருப்பு தொடர்பான அனுமதி பற்றிய தகவல்களும், பின் குடும்பம், தனிமையாக உள்ளவர்கள் பற்றியது முன்னிலை வகித்து குடும்ப விருத்தியின் இருப்பாகமாறிய நிகழ்வு விபரங்களும், இப்போது குந்திய இடங்களிலிருந்து கிளைபரப்பும் புதிய வாழ்வாகிய தகவல்களுமாகி விட்டன.

முப்பது வருடங்கள் கழியும் இந்த ஓட்டத்தில் இயைந்துபோகும் மானிட இயற்கையையின் விந்தையை நேரில் காணுற்று பட்டும், தொட்டும் படாததுமாகப் பயணிக்கும் முதல் தலைமுறையின் நினைவில் அசைபோடும் எண்ணங்கள் சற்றே விலகி நிற்பது யதார்த்தம்தானே!


தன் சொந்த மண்ணின் கிராமத்தில், சொந்த வீட்டை, ஊரைக்கூட நாடிப்போக முடியாது உள்ளக, இடப்பெயர்வுகளில், இரவோடிரவாக, கதியற்றுப் போன, ஆயிரக்கணக்கான, குடும்பங்கள், பிற மாகாணங்கள் என நீண்ட காலமாக, தனித்து வா
ழும் நிலை காண முடிகிறது! பக்கத்து நாடாகிய இந்தியாவின் தமிழகத்தில், மிகவும் அவலங்களுக்கும், வறுமை, சத்தின்மை, கல்வி, வேலை வசதிகள் இன்றி, மேலை நாடுகளில், அகதி நிலை நிலையுள்ள உறவுகளின் உதவி பெற்று, காலத்தை கழிப்பவர்களின் வாழ்க்கை இருள் சூழ்ந்த ஒன்றாகவே உள்ளது. அவ்வாறானவர்களின், எதிர் காலம், எண்ணிப் பார்க்கவே முடியாத ஒன்றாகும்! இத்தகையவர்கள், தம்மையே முழுமையாக இழந்துள்ளார்கள். தமது சொந்த மக்களுடன் குடிகளாக வாழ்ந்தவர்கள், இன்று கூட இருந்த குற்றத்தினால், குற்றுயிராக, அனைத்தையும் இழந்து, இதுவரை உலகம் காணதா மனித அவலங்களை அனுபவித்து, தம்மை இழந்து, மரண வாயிலில் நிற்கிறார்கள்.
உலகில், எத்தகைய நிலையுடையவர்களாக வாழ்ந்தவராயினும், “கதி அற்ற மனிதன்“(அகதி) என்பவன் என்ற எண்ணத்தில் வாழும் எவருமே மிகவும் மகிழ்வுடன் வாழ்வதாக எண்ணி பார்க்க இயலாது. இது பிறப்புரிமையின் சொந்தம் இழந்த, சொந்த முகம் இழந்த சோகம் நிறைந்த வாழ்க்கையன்றோ!


என்ன குறை உண்டு உந்தனுக்கு? எண்ணிப்பார்! தமிழனே.....


யார் கூறுவர் உந்தனுக்கும் குறை உள்ளதென்று, “வாழ்க்கை பஞ்சு மெத்தை“ என்ற கூற்று, மேலை நாட்டு வாழ்க்கைக்கன்றி, வேறெங்கும் உள்ளவர்களுக்கல்லவே! இதனாற் போல், உன்னைப் பதம் பார்க்கவும், அறிவை மயக்கவும், எத்தனை சக்திகள் வலம் வருகிறன என்பதை அறிய முடிகிறது! திடீர்ச் சாம்பாறு என்றவா
று, எல்லாமே திடீர், திடீரென உன்னையே சுற்றிக்கொண்டு, நுகர்ச்சி வலை போட்டு(இறால் போட்டு சுறா பிடிப்பது போல!) உனது கவனத்தை நசுக்கும் வேலை மிக நைஸ்ஸாக நடை பெறுகின்றன!

இரத்தம் சொட்ட இரவு பகலாக, பாடுபட்டு உழைத்தது எல்லாம் தொலைக்கப்படுவதும், தொடரமுடியாத போது வட்டி வாசிக்காவது, ஈடுசெய்து, இறுதியில் காலாவதியான கதைகள் பல உண்டு. எனவே எதிர்கால ஒளி காண, நம் வழியைத் திருத்திக்கொள்வதே புத்திக்கொள்முதல் எனலாம்! இன்றேல், நாளை நம்மை, ஊரும் உறவும், இந்த உலகமும் ஏறெடுத்துக் கூட பார்க்கமாட்டாது!

'காலம் பொன்னாது' என்ற கூற்றுக்க அமைவாக காலங்கருதி வாழ்வதுதான் வாழ்க்கை. காலத்தை தவற விட்டால், சென்ற ஒரு விநாடி கூட மீளப் பெறமுடியாது.
உணவு முறை, பொழுது போக்கு, ஓய்வு நேரம், உடலைப் பேணல், இவை முறையாக, அளவாக, பயனுடையதாக கைக்கொள்ளத் தவறினால், வாழ்க்கையே தவறிப்போகும். இன்று, வறுமை காரணமாக ஏற்படுகின்ற தாக்கங்களைவிட, வளர்ச்சி அடைந்த முன்னணி நாடுகளில், குறிப்பாக புலப் பெயர்வில் வாழும் நம்மவர்களில், ஐம்பது தாண்ட முன்பே பல்வேறு, புதிய தாக்கங்கள் ஏற்பட்டிருக்கின்றன! நம் முன்னவர் காணாத, பல புதிய உடல் உபாதைகள் மட்டுமல்ல மரணிக்கும் தவல்களும் காணப்படுகின்றன!


நாளைய அடையாளங்கள்

முதிய தலை முறை எண்ணிக்கை குறைந்து, தமது புலப்பெயர்வின் அத்தியாயங்களை முடிக்கும் காலம் மிகச் சுருங்கியதாகிறது. ஆனாலும், அவர்களில் ஒருசிலரின் அறிவு சார்ந்த செய
ற்திறன் காரணமே, இன்று (எல்லாமே நன்மை என்று கூற முடியாவிட்டாலும்) நடைமுறை பயனுள்ள சாத்தியங்களாகி உள்ளன என்பது வெளிப்படை! சமூகத்தை ஆளுமை செய்யும் எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், கலையார்வலர்கள், சிற்றதழாசிரியர்கள், ஊடகவியலாளர்கள், துறைசார் வல்லுநர்கள் என பல் துறையினரில், புலப் பெயர்வில் புகலிடந் தேடிய முதல் தலைமுறையினரே அதிகம். இத்துறைகளை வழி நடத்தும், சமூகப் பிரக்ஞையுடைய இளந் தலைமுறையினர் மிகக் குறைவாகவே இருப்பதும், இவர்களில் பலர் பிற மொழித் திறன் கொண்டிருப்பினும், ஆழ்ந்த தாய்மொழியறிவு (ஒருசிலரைத் தவிர) பெரும்பான்மையினருக்கு வாய்க்காத காரணத்தால் ஒப்பிடும் துறைசார் நிபுணத்துவம் போதியதாக சமூக மீள்பாக்கலுக்கு செல்ல தடங்கலாகிறது. கற்றுத் தேறிய மொழியிலும் வாய்ப்புக் கிட்டியவர்கள் குறைவானவர்களாகவே இருக்கின்றனர்!

மேலும் தம்போன்ற ஏனைய இளைய தலைமுறையினரிடையே காணப்படுகின்ற, விளையாட்டு, மெல்லிசை, மேனாட்டிசை, படைப்பிலக்கிய ஆர்வம் போன்ற மேலதிகத் திறனுடையவர்களை நம் புதிய தலை முறையினரிடையே தேடியே அலையவேண்டியிருக்கிறது! இது, மிகத் தேவையும் வாழும் நாட்டு மக்களின் ஆதரவையும்
அபிமானத்தையுங்கூட எமது பக்கம் திரும்பச் செய்யும் மிகப் பெரிய ஆளுமைகொண்டது! இதனை ஊக்குவித்து வளமூட்டும் பணியை புலம்பெயர் ஊடககங்கள் தமது தார்மீகப் பணியாச் செய்தல் வேண்டும்.

ஐரோப்பிய நாடுகளில், எம்மைப் போல வந்து குடியேறிய ஆபிரிக்க நாடுகளைச் சார்ந்த இளைஞர்கள், உதை பந்து விளையாட்டு வீரர்களாகி வாழும் நாட்டில் மிளிர்கிறார்கள். டெனிஸ் வீரர்களாக களம் இறங்கியுள்ளார்கள். பொது விளையாட்டுகளில் தமது அளப்பெரிய திறன்களால் உலகத் தொலைக் காட்சிகளில் இடம்பிடிக்கிறார்கள். ஆனால், நமது தலை முறை தாண்டிய புதிய தலைமுறையில் வந்தவர்களில் யார்? - இதற்கான பதிலை நாம்தான் அலசிப் பார்க்க வேண்டும்!

இந்த வெறுமை இளந்தலைமுறையின் தவறென்று மட்டும் கூறமுடியுமா? அவர்தம் பெற்றோர்களாகிய இந்த முதல் தலைமுறையின் ஆர்வம் இல்லாமை முக்கிய காரணம் என்பதை மறுக்கத்தான் முடியுமா?
பெற்றோர் தமது பிள்ளைகள் எப்படியாவது கல்வி கற்று ஏதாவது பணமீட்டும் வேலை ஒன்றை மட்டும் பெற்று, பொருள் தேட முடிந்தால் திருப்தி என்ற ஏகாக்கிர எண்ணம் கொண்டிருந்ததால் ஏனையவற்றில் சாதனை படைக்க முடியாது போய்விட்டது!

சாதனைக்குரிய படைப்பாளியாக, கலைஞனாக, எழுத்தாளனாக, விளையாட்டு வீரனாகத் தங்கள் பிள்ளைகள் வரமுடியும் என்ற நம்பிக்கையும் அதற்கான பயிற்சி, விடாமுயற்சி, ஊக்குவிப்பு, அர்ப்பணிப்பு என கடின சாவால்களை எதிர்கொள்ள வேண்டும்! நவீன தொழிற் பயிற்சி பெற்ற பின்னர், அத்துறையில் ஈடுபடாது, மொழியறிவு மட்டும் போதும் என்றவாறு, பயிற்சியற்றவர்களைப் போல, வர்த்தகத் துறையில், போதிய பயிற்சியற்ற நிலையில், ஈடுபட்டு முதலுக்கே மோசமாகிப் போன பலரைக் காணாமலா இருக்கிறோம். இவ்வாறு, பொருள் தேட முயன்று, ஈற்றில், கை முதலுக்கே இழப்பேற்படக் காரணம் அத்துறையில் போதிய அனுபவமில்லாமைதான்!


பல்துறைசார் வல்லுனர்களாக எமது புதிய இளந் தலைமுறையினர் உலகத்தாரால் மதிக்கப்படும் நிலைக்குச் செல்ல நாம் இப்போதிரு
ந்தே சிந்திக்கவும், இதற்கான அத்திவாரமிடலிலும் ஈடுபடவேண்டும். சமூகப் பிரக்ஞையுடனான அகவளமிடும் தனி மற்றும் நிறுவனமயமாகும் மையங்களையும் இனம்காணவும் உருவாக்கவும் வேண்டும். இதற்கு வெறுமையாக சினிமாக்களாலும், இதன் தொடர்ச்சியான திரைசார் நிகழ்வுகளாலும், முடிவிலித் தொடர்களாலும் நிரம்பி வழியும் நம்மவர் ஊடககங்களில் முதற்கட்ட பண்புமாற்றம் நிகழ்த்தப்பட்டாக வேண்டும். இதனை இன்று தலையெடுக்கும் அடுத்த தலைமுறையினர் செய்ய வேண்டும். செய்வார்களா?

***********

இசை தமிழச்சி M.I.A என்கின்ற ‘மாயா’ மாதங்கி அருள்பிரகாசம்
மேற்கத்தியவர்களால் அதிகமாக பாராட்டைப்பெற்ற M.I.A என்கின்ற ‘மாயா’ மாதங்கி அருள்பிரகாசம் இன்று உலக அளவில் நன்கு அறியப்பட்ட எமது அடுத்த தலைமுறை வாரிசு. இன்றைய அமெரிக்க சனாதிபதியாகியுள்ள ஒபமாவின் துணைவியாருக்க நன்கு பரீட்சியமாகும் அளவிற்கு இவரது தனித்திறன் விளங்கியிருக்கிறது.

லண்டன் வாழ்வியலையும், ஈழ அரசியலையும் சித்தரித்த மாயாவின் graffiti ஓவியங்கள் 2001 -ல் Alternative Turner விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. அதன் மூலம் Elastica குழுவை சேர்ந்த ஜஸ்டின் ஃபிரிச்மேனின் தங்களது இரண்டாவது ஆல்பமான The Menance -ன் அட்டைப்படதுக்கு மாயாவை நாடினார். அடுத்து அந்த குழுவின் அமெரிக்கா இசைப்பயணத்தையும், அவர்களது Elastica-வின் “Mad Dog God Dam” இசை வீடியோ பதிவையும் செய்யும் வாய்ப்பும் மாயாவுக்கு.. அந்த பயணத்தில் தான் மாயாவுக்கு இசையின் மீது நம்பிக்கை பிறந்தது.. மேலும் லண்டனில் உள்ள சென்ட்ரல் செயிண்ட் மார்டின்ஸ் ஆர்ட் அகேடமியில் தனது கலைப் பட்டப்படிப்பை முடித்தார். பட்டப்படிப்பு முடிந்ததும் இவர் தனி இசைப்பாடல்கள் இயற்றுவதும் தானாகவே ஆல்பங்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டார். கல்லூரியில் படித்துக்கொண்டு இருக்கும் போதே மாயாவின் முதல் இசை ஆல்பமான அருளரில், கிலாங் (Galang) மற்றும் சன் பிளவர் (Sunflower) எனும் பாடல்கள் கல்லூரியின் வானொலியிலும், ஃபையில் ஷரிங்கிலும் அதிகமாக பிரபலமானது மட்டுமல்லாமல் ஷோ பிஸ் ரெகார்ட்சில்லும் அதிகமான பதிவை ஏற்படுத்தியது… அடுத்து வந்த மாயாவின் கலா (2005), இசை ஆல்பம் சென்சார்களில் சிக்கினாலும் பில் போர்டின் டாப் 200 பாடல்களில் 18 வது இடத்தை பெற்றது.

“கலா” இசை ஆல்பத்திலிருந்து வந்த பேப்பர் பிளேன்ஸ் பாடல், தற்போது இசை உலகின் பெரிய விருதான கிராம்மி விருதின் பக்கத்தில் நிற்கிறது . மேலும் இந்த பாடல் ஸ்லம்டாக் மில்லியினரில் பயன்படுத்தப்பட்டு உலக அளவில் அதிக பாராட்டுகளை வாங்கியிருக்கிறது. ஆனால் ஆஸ்கார் விருதுக்கு, படத்தின் ஒ சாயா பாடலுக்கு தான் மாயா பரிந்துரைக்கபட்டவர். ஸ்லம்டாக் மில்லியினர் இசையமைப்பில் தன்னுடன் பணியாற்றியதற்காக ரஹ்மான் கோல்டன் குளோப் விருது வாங்கும் மேடையில் மறவாமல் மாயாவுக்கு நன்றி தெரிவித்ததை நினைவில் கொள்ளலாம்.

ஸ்லம்டாக் மில்லியினர் மூலம் இந்திய தமிழனும், ஈழத்து தமிழச்சியும் ஆஸ்காரின் விருதுப்பட்டியலில் நுழைந்து விட்டனர் என்பது உலக தமிழர்களின் அளவிட முடியாத பெருமையே!

நன்றி: http://rasanaikaaran.com/2009/02/02/mia/

மாயாவின் பாடல் மற்றும் பேட்டி குறிப்புகளுக்கு:
*********

நினைவுத் துளிகள் சொட்டும்.....

No comments:

Post a Comment