Wednesday 24 June 2009

சரம் - 9 அரோகரா! அரோ....கரா....!!

அரோகரா! அரோ....கரா....!! ‘அரோகரா மதம்’

இப்போது அதிகம் பேசாத உறவாடல்களாக நட்புகளுடான சந்திப்புகள் நடப்பது சோகம்தான். கேட்டால் 'என்னத்தைச் பேச' என்ற பதிலே வரும். புலம்பெயர்வு வாழ்வின் நீட்சியும் எதிர்காலம் தொடர்பான கவலையும் முதற் தலைமுறையினர் மத்தியில் பேச்சற்ற சூழலை ஏற்படுத்தியிருப்பது யதார்த்தமானதுதான். ஆனாலும் சமூக அசைவியக்கம் தடங்கலில்லாது தொடர்கிறது. திட்டமிடப்பட்டிருந்தபடியே அடுத்த தலைமுறையினரின் திருமணங்கள், பிறந்தநாள், புது வீடு குடிபுகல் என கொண்டாட்டச் சந்திப்புகள் நடைபெறுகின்றன.

இப்படியான நிகழ்வொன்றின்போது மிகவேண்டப்பட்ட உற்றாருடனான சந்திப்பில் நிகழ்ந்த உரையாடல் பெரிதும் ஈர்த்தது. கதை கேட்பதில் அபரித விருப்புக் கொண்ட சமூகத்திற்கு ஏற்ப தற்போது ஊகங்களாலேயே கதைகள் பல நடமாடத் தொடங்கியாயிற்று. எங்குமே 'அவர் வருவாரா மாட்டாரா?' இதுதான் பேசு பொருள். இதற்குமாறாக அன்றைய சந்திப்பில் கலந்து கொண்டிருந்தவர்களது உரையாடல் அமைந்திருந்தது.

"இன்றைய இக்கட்டான சூழலுக்கு ஈழத்தமிழரின் பெரும்பான்மையினரால் தழுவப்பட்டுள்ள மதமும் முக்கிய காரணம். இதை விவாதத்துக்காக நான் முன்மொழிகிறேன்" என்றார் ஒருவர். சுவாரிசத்தால் கவரப்பட்டவனாகி புலன்களை உசார்படுத்தினேன்.

"அப்படிச்சொல்ல முடியாது. மதத்தில் எப்படி குற்றம் சாட்ட முடியும்?" பதட்டத்துடன் வேறொருவர்.

"சண்டைகளில் தோற்ற மதம் செயலிழக்க வேண்டும்தானே!" இன்னொருவர்.
"மக்களின் செயற்பாடுகளில் மதச் சிந்தனையின் வழிகாட்டுதல் இருக்கவே செய்யும். வெற்று நம்பிக்கைகளுடனான முயற்சிகளில் ஈடுபட வைக்கும். இதனால்தான் சொல்கிறேன் இந்த முடக்கத்திற்கு மதமும் முக்கிய காரணம்." என்று தனது கருத்தை வலியுறுத்துகிறார் முதலாவது கருத்தைச் சொன்னவர்.
இதில் கலந்கொள்ளாது தவிர்க்கவோ என்னவோ இருவர் சற்று கலக்கத்துடன் ஏதுமே பேசாது வெளியேறினர்.

"இப்படி விட்டாத்திதனமாக் குற்றம் சாட்டக்கூடாது. மதவுணர்வு தனிப்பட்டது மென்மையானது." இரண்டாதவர்.

"இங்கு பாருங்கோ நமது சிந்தனைகளில் தாக்கம் புரிந்த அனைத்தையும் சுயவிமர்சனம் செய்தால்தான் நாம் உருப்படியான முடிவுகளுக்கு வரலாம்." முதலாவதவர் விட்டுக்கொடுப்பதாகத் தெரியவில்லை.

"சரி... இதுக்குள் எப்படி மதத்தை ஒப்பிடப் போகிறீர்கள்? சொல்லுங்கோ... " என்கிறார் இதனால் உந்தப்பட்ட புதியவர்.

" நம்மவர்கள் இஸ்லாமியராக இருந்திருந்தால்... எமக்கு இப்படியாக உலக அரங்கில் நிர்க்கதி ஏற்பட்டிருக்குமா? சரி நம்மவர்கள் பெரும்பான்மையானோர் கத்தோலிக்கர் எனவாக இருந்திருந்தால்... உலக கத்தோலிக்கத் திருச்சபை சும்மாவிட்டிருக்குமா?" முதலாவது கருத்தாளரின் வார்த்தைகள் முகங்களில் பட்டுத் தெறிக்கிறது. சில முகங்கள் தலை சாய்க்கின்றன.

"ஓம் இந்த இந்து மதம் ஏதும் செய்யக் கூடியதான நிறுவனக் கட்டமைப்பாக இல்லையே?" என்றார் மதத்தை குற்றம் சாட்டியதை ஜிரணிக்கமுடியாதவராக புதியவர்.
" அப்படித் தப்பிக்க முடியாது நண்பரே, 21ம் நூற்றாண்டில் நிறுவன வடிமில்லாது எப்படியாக இம்மதம் செயற்படுகிறது? எதற்காகச் செயற்படுகிறது?" கேள்வி சூடாகவே விழுகிறது.

"நிறுவனமயமாகாத கட்டமைப்பில்லாத இந்த மதத்தை எப்படி 'இந்து மதம்' என அழைக்கிறார்கள்?" முதலாவதவர் பொழிகிறார். சொல்வதறியாது திகைக்கிறது நட்பு வட்டம்.

"இதனால்தான் இந்த மதத்தை 'அரோகரா மதம்' என்கிறேன். போடுங்கோ எல்லோரும் 'அரோகரா!...' அரோகரா!!"

வாயடைத்தது கூட்டம். நானும்தான்!

வீடு திரும்பி கட்டிலில் சரிந்தபின்பும் இந்த உரையாடல் மனதில் வட்டமிட்ட வண்ணமே இருந்தது. 

'அரோகரா' அப்படியென்றால் என்ன? இச்சொல்லுடன் வேறு சில சொற்களும் உலாவத் தொடங்குகின்றன.
 'அரோகரா' 'கோவிந்தா' 'சுவாகா' 'அல்லலோயா'....
மானிட வாழ்வில் மனத்தின் வெறும் நம்பிக்கைகள் படாய்ப்படுத்துகின்றனதான். 

மனம் போன போக்கில் மனிதன் போகலாமா? 

-அருந்தா
பாரீஸ் யூன் 2009

No comments:

Post a Comment