Tuesday 2 June 2009

சரம் - 6 யார் சிறிலங்கன்?

யார் சிறிலங்கன்?

இன்று எக்காளமிடும் ஏகஇன நிலைநாட்டலுக்கான சிறிலங்க பெருந்தேசியத்தின் கட்சிபேதமற்ற நிகழ்வுகளின் அல்லோலகல்லோத்தில் உலகம் அசந்துபோயிருக்கிறது. இந்நிலையில் எழும் வேதனைகளுடன் இணைய உலா வரும்போது காணுற்ற பதிவொன்று மூளையைக் குடைச்சலெடுத்தது. இன்று உலகெங்கிலும் ஈழத்தமிழர்கள் விரசியெறிப்பட்டதற்கான எண்ணக்கருவை இந்தத் துணுக்கு அழகாக மையமிட்டிருக்கிறது.
கானப்பிரபாவின் பதிவை அவர்து அனுமதியுடன் மீள்பதிவிடுகிறேன்.
(நன்றி: மடத்துவாசல் பிள்ளையாரடி)

0000000000000000000000000000000000000000000000000

1995 ஆம் ஆண்டின் சித்திரை மாதத்தில் ஒரு நாள். இருபதுகளின் ஆரம்பத்தில் என் வயது அப்போது. அவுஸ்திரேலியா வந்து ஒரு சில வாரங்கள் கடந்திருக்கும். அதுவரை அண்ணன் அனுப்பிய பணத்தில் படிக்க ஆரம்பித்துப் பின் குற்றவுணர்வு உறைக்க ஆரம்பித்த நாள் அது. அப்போது இங்கே வேலை தேடித் தர அரசாங்கத்தின் முகவர் நிறுவனமாக C.E.S என்ற அமைப்பே இருந்தது. அந்த அமைப்புக்குப் போய் வேலைவாய்ப்புப் பட்டியலைப் பார்க்கின்றேன். எல்லா வேலைகளுக்குமே "experience required" என்று அடியில் ஆப்பு வைக்கப்பட்டிருந்தது. தேடிச் சலித்த என் கண்களுக்கு ஒரு வேலை விபரம் கண்களைக் குளிர வைத்தது.
"ஒரு சிறீலங்கன் மளிகைக் கடைக்கு ஆள் தேவை, சிறீலங்கனாக இருப்பது விரும்பத்தக்கது"
அவ்வளவு தான் பக்கென்று அந்தக் கடை குறித்த விபரங்களை வேலைவாய்ப்பு அலுவலகரிடம் பெற்றுக் கொண்டு அடுத்த நாள் அந்தக் கடைக்குப் போகின்றேன்.

நான் வருவது குறித்து ஏற்கனவே அந்த வேலைவாய்ப்புப் பணியகம் அந்தக் கடைக்காரரிடம் சொல்லி வைத்தது போல. கல்லாப் பெட்டிக்குப் பக்கத்தில் நின்ற அந்த நபர் தான் கடை முதலாளி என்று எழுதி ஒட்டாமலே தெரிந்தது. கையோடு கொண்டு போன என் விபரத்தைக் கொடுக்கிறேன்.

என் விபரங்கள் எல்லாவற்றையும் முழுசாகப் பார்த்து முடித்து விட்டு
"அதோ அங்கே நிற்கிறாரே அவர் தான் முதலாளி என்று ஆங்கிலத்தில் பேசி கடையின் உட்புறம் மூட்டைகளை அடுக்கிக் கொண்டு நின்ற ஒரு வயதான பெனியன் மட்டும் அணிந்த கிழவரைக் காட்டுகிறார்.
நான் போய் அவர் முன்னால் நிற்க, அந்தக் கிழவரோ ஏன் இவன் எனக்குப் பக்கத்தில் நிற்கிறான் என்று தெரியாமல் விழிக்க, நான் ஆங்கிலத்தில் பேச ஆரம்பிக்கிறேன். அவர் விழுந்து விழுந்து சிரித்து விட்டு குறும்பாக, முன்னே கல்லாப்பெட்டிக்குப் பக்கத்தில் நின்ற அந்த முதலாளியைப் பார்த்து முறுவலிக்கிறார்.

நான் அதை உணர்ந்தது போல அசட்டுச் சிரிப்புடன் மீண்டும் அவரை நோக்கிப் போகின்றேன்.

"நான் சிறீலங்கன் விரும்பத்தக்கது என்று அந்த விளம்பரத்தில் போட்டது சிங்களவராக கட்டாயம் இருக்க வேண்டும் என்ற அர்த்தத்தில் தான்" என்று சொல்லிச் சிரித்து வழியனுப்பாமல் அனுப்புகிறார் அந்தக் சிங்களக் கடைமுதலாளி.

"ஓ சிறீலங்கன் எண்டா சிங்களவன் மட்டுமாம், சரி" மனசுக்குள் சொல்லியவாறே மீண்டும் வேலைவாய்ப்புப் பணியகம் நோக்கி நடையில் பயணிக்கிறேன்.
மேலே இருந்து சூரியன் சிரித்துக் கொண்டிருந்தான்.


(மேலே சொன்ன சம்பவங்கள் யாவும் உண்மையே) posted by கானா பிரபா

நன்றி : http://kanapraba.blogspot.com/2009/05/blog-post_22.html

No comments:

Post a Comment